இராமேஸ்வரம் திருத்தல புராணம்.
சிவமய க்ஷேத்ரம்
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
சேதுக்கரை எனும் தனுஷ்கோடி!
வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் தனுஷ்கோடி இங்கு குளித்தால்தான் காசியாத்திரை முடிவுபெறுகி றது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ராமர் இந்த தனுஷ்கோடிப் பகுதியில் இருந்துதான் இலங்கைக்குப் பாலம் அமைத்துச் சென்றார் என்பதால் இது சேதுக்கரை என்றும் அழைக்கப்படுகி றது. சேது என்ற வடமொழிச் சொல்லுக்குப் பாலம் என்று பொருள்.
இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்ட பிறகு ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தங்களது வானரப்படைகளுடன் இந்தச் சேதுப்பாலம் அணை வழியாகத்தான் ராமேஸ்வரத்துக்கு வந்தனர். இவர்களுடன் ராவணனின் தம்பியான வீபிஷணனும் வந்தான். வந்தவன் ராமனிடம் சேது அணையை உடைத்து விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.
ஸ்ரீராமன், விபீஷணனின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய வில்லின் முனையால் (தனுஷ்வில், கோடி முனை) சேது அணையை உடைத்ததால் இவ்விடத்துக்கு தனுஷ்கோடி’ என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபீஷணன் ராமனை சரணாகதி அடைந்த இடமும் தனுஷ்கோடிதான். விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக முடிசூட்டப் பட்டதும் இங்குதான்.
இந்த சேதுக்கரையைக் காப்பதற்கும் ராமலிங்கத்தைப் பராமரிப்பதற்காகவும் கங்கைக்கரை குகனின் வழிவந்த மாவீ ரர்களை ஸ்ரீராமர் நியமித்தார். அவர்களே சேதுவுக்கு அதிபதியாகி விளங்கிய சேதுபதி என்றழைக்கப்பட்டனர்.
பாதாள அமுதமாகிய சேதுக்கடலும் கயிலாய தீர்த்த மகாசக்தியும் இங்கு ஒன்றாகக் கலக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா ? இது ஓர் அரிய தகவல் மட்டுமல்ல, பிரமிப்புக்குரிய விஷயமும் கூட!
அதாவது சேதுக்கரையின் கடல்நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கடல் நீரோட்டத்தின் வேகம் அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி தினங்களில் அதிகம் பெறுவதால், அந்த வேகத்தில் கடலின் அடிவரை சுழற்சி கண்டு அடி யிலுள்ள மூலிகைகளின் உயிர்ச்சத்துகளைச் கடலின் மேல் மட்டத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த மூலிகைகளின் ஜீவசத்துகள் அமிர்தத்துக்கு நிகரானவையாக உள்ளன.
இந்த மாற்றத்தால் உண்டாகும் காந்தசக்தியும் மருத்துவக் குணமும் இந்த உயிர்ச் சத்துகளை போஷித்து வளர்க்கும் உயரிய மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது. அதன் காரணமாகவே இந்தச் சேதுதீர்த் தம் புனிதமாகக் கருதப்படுகிறது. எனவே புனித தீர்த்தமாகிய சேதுவில் நீராடி, அவர்களுடைய பூர்வ புண்ணிய பாவங்களையும் போக்கிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தையும் சேது தீர்த்தமாகவே கருதி பக்தர்கள் நீராடுவதும் உண்டு.
தனுஷ்கோடியில் அர்த்தோதயம், மகோதியம் ஆகிய இரு நாட்களிலும் நீராடினால் மிகவும் புண்ணியம். மேலும் இந்த இருதினங்களிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளை இங்கு செய்வதால் இறந்தவர்களுக்கான பாபவிமோசனமாக அமையும் என்ற நம்பிக்கை காலங்காலமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தனுஷ்கோடியில் சேதுமாதவப் பெருமாள் என்ற திருப்பெயரில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் இருந்துள்ளது. வைஷ்ணவர்களால் போற்றப்படும் நூற்றியெட்டு வைணவத் தலங்களுக்கு நிகராகக் கருதப்படுவது இந்த ஆலயம்.
இங்கு ஏற்பட்ட புயலின் காரணமாக இந்த ஆலயமும் கடலில் மூழ்கிவிட்டது. இந்தச் சேது தீர்த்தமும் கடலால் சூழப்பட்டு விட் டதால் ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத் தைச் சேது தீர்த்தமாக ஏற்றுப் புனித நீராடி வருகிறார்கள் பக்தர்கள்.
அடுத்து நாம் செல்லப்போவது ராமநாத சுவாமி கோயிலுக்குத்தான்.
அலையில்லாத கடலான அக்னி தீர்த்தம் !
கோயிலுக்குள் செல்லும் முன்பாக முத லில் நீராடலுக்கு அக்னி தீர்த்தம்.
ஸ்ரீராமபிரான் சீதையைத் தீக்குளிக்குமாறு ஆணையிட, அதன்படியே கற்பின் கனலான சீதை தீக் குண்டத்தில் இறங்கியபோது, அக்னிதேவனை சீதையின் அந்தக் கற்பு நெருப்பு சுட்டதாம்.
சீதாப்பிராட்டியாரின் அந்த கற்புவெப்பத்தைத் தாங்கமுடியாத அக்னிதேவன் இந்தச் சமுத்திரத்தில் வந்து நீராடி தன்னைத் தகித்த வெப்பத்தைத் தணித்துக் கொண்டான் என்கிறது புராணம்.
ஆம் ஆச்சரியம் தான் ! இங்கே கடல்நீரில் நீராடும்போது இன்றும் கடல்நீர் வெது வெதுப்பாகத்தான் இருக்கிறது. ராமனின் கட்டளைக்கேற்பவே இன்றும் கடலில் அலையே இல்லை.
இந்தக் கடல் மண்ணில் காந்த சக்தி இருப்பதால் இந்த வெதுவெதுப்பு என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி, இதன் கரையிலேயே பித்ருக்களுக்கான சடங்குகளைச் செய் கின்றனர் பக்தர்கள்.
அக்னி தீர்த்த நீராடலை முடித்துக் கொண்டு புறப்பட்டால் அடுத்தது ராமநாத சுவாமி ஆலயம் தான்.
தினந்தோறும் கங்கா அபிஷேகம் :
ஆலயத்தின் எல்லாத் திசைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், வங்கக் கடலின் தென்கோடியில் குடிகொண்டு இருக்கும் ராமநாத சுவாமியின் அருளைப் பெற தினந்தோறும் நாடெங்கிலுமிருந்து, கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருக் கிறார்கள் பக்தர்கள்.
கடவுள் அவதாரமான ஸ்ரீராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விசேஷம் கொண்டவரல்லவா இந்த ராமநாதர் !
இந்த ராமநாத சுவாமி ஆலயத்துக்குள் புனிதத் தீர்த்தமாகக் கருதப்படும் 22 தீர்த்தங்கள் உள்ளன.
பக்தர்கள் ஒவ்வொருவரும் சந்நிதிக்குப் போகுமுன் இந்தத் தீர்த்தங்களில் நீராடி விட்டு இறைவனைத் தரிசித்து அவரின் அருளாசியைப் பெற வேண்டுமென்பது ஐதீகம்.
இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ராம லிங்க சுவாமிக்கு அவரின் திருமேனியைத் தீண்டி பூஜை செய்யும் உரிமை அர்ச்சகர்களைத் தவிர மூன்றே பேருக்குத்தான் இருக்கிறது.
ஜகத்குரு ஸ்ரீசிருங்கேரி மகாசந்நிதானம், ஜகத்குரூ ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி கள் மற்றும் ராமபிரானின் ரவி குல வழித் தோன்றலாகக் கருதப்படும் நேபாள மன்னர் ஆகிய மூவர்தான் இந்தப் பெருமை பெற்றவர்கள்.
இங்கு இறைவனின் சந்நிதியில் பூஜை செய்பவர்கள் ஸ்ரீ சிருங்கேரி மகாசந்நிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்ற கர்நாடக மாநிலத்து அந்தணர்கள்.
கோயிலில் ஸ்ரீ ராமநாத சுவாமிக்குத் தினந் தோறும் கங்கை நீரால்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனின் இந்த அபிஷேகத்துக்காக வடநாட்டு பக்தர் ஒருவர் தவறாமல் கங்கை நீரை மிகப் பெரிய அளவில் சீலிட்டு ராமேஸ்வரத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஸ்ரீராமநாத சுவாமி ஆலய மேற்கு வாசல் கோபுரம் மிகக் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. கோயிலைச் சுற்றிலும் உயர்ந்த மதிற்கூவர். இந்த உயர்ந்த மதில் சுவர்கள் கிழக்கு மேற்காக 865 அடி நீளமும் தெற்கு வடக்கில் 657 அடி அகலமும் உடையது.
கருங்கற்களைக் கொண்டு அமைக்கப் பட்ட மேற்கு கோபுரம் 78 அடி உயரம்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமநாதபுர அரசர் உடையான் சேதுபதியும் நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் இணைந்து இந்த மேற்கு கோபுரத்தையும் மதில் சுவரையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.
தெற்கு மற்றும் வடக்குக் கோபுரங்கள் காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்திலிருந்து கட்டப்பட்டுள்ளன.