Saturday, 1 January 2022

பகவத் கீதை படிக்கும் முறைகள்

படிப்பது சுலபம் - பகவத் கீதை !

பகவத் கீதை நூலை தானே படித்து அதிக பலன் பெற சுலப முறை....

1.. சிரமமின்றி படிக்க இந்த நூலை கண்டுபிடித்து வாங்க முயற்சிக்கவும்.
கீதாப்ரஸ் வெளியீடு, பகவத்கீதை - வரிசை எண் 823
கிடைக்குமிடம்: 9362202521 , 04223202521

2.. முதலில் ஒரு முறை சுலோகங்களின் சம்ஸ்க்ருத வரி வடிவங்களைத் தவிர்த்து, மொழிபெயர்ப்பினைத் தவிர்த்த விளக்கங்களையும் தவிர்த்து, மொழிபெயர்ப்பை மட்டுமே ஒருசுற்று படிப்பது அவசியம்.

[ மேலே சொல்லப்பட்ட புத்தகத்தில் விளக்கம் இன்றி மொழிபெயர்ப்பு மட்டுமே இருக்கும்.  ]

3.. சிவப்பு , நீலம் என குறைந்தது இரண்டு நிற எழுதிகளை உடன் வைத்துக்கொள்ளவும்.

4. புத்தகத்தை தொட்டுக்கும்பிட்டு படிக்கத் துவங்குவதும், முடிக்கும் போதும் தொட்டுக்கும்பிட்டு எடுத்து வைப்பதும் மிகவும் நல்லது.

5. பெண்கள், ஆண்கள் யாருமே எல்லா நாட்களிலுமே படிக்கலாம்.

6. முடிந்தவரை அமைதியான மன நிலையிலும், வேறு பணிகளில் இடையில் ஈடுபடாமலும், பொறுமையாகவும், மன ஒருமுகப்பாட்டுடனும் படிக்கவும்.

7. நேரம் இருந்தால், முதல் நாள் அல்லது இதற்கு முன்பு கடைசியாக  படித்ததை சிறிது புரட்டி நினைவுபடுத்திக்கொண்டு, புதிய பகுதியை தொடர்வது சிறந்த பலனைத் தரும்.

8. என்னதான் படித்தாலும் அதன் பொருளை நமக்குள் ஏற்படுத்த வேண்டியது வ்யாசாசார்யரும் ஸ்ரீ கிருஷ்ணரும்தான். அதற்காக அவர்களை ஒரு நிமிடம் மனதில் ப்ரார்த்தித்து படிக்கத் துவங்குவது வழக்கமும் சிறப்பும்.

[ அர்ஜூனர் ஏற்கெனவே வேதங்களை படித்து இருந்தவரே. மேலும் பல சாஸ்திர விளக்கங்களை நன்கு கற்று கடைபிடித்து வந்தவரே. எவ்வளவுதான் படித்து இருந்தாலும்கூட ஒரு நேரம் வரமுடியும், சிக்கலான சூழ்நிலைக்கு படித்ததிலிருந்து பதிலை எப்படிக் கண்டுபிடிப்பது அல்லது பொருத்துவது என்பது பிடிபடாமல் போகலாம். அப்போதெல்லாம் தம்மை விட சிறந்த ஞானம் உள்ளவர்களிடம் பேசி தெளிவு பெறவேண்டும் என்பது பாரத வேத உபதேசமும், நமது பாரத பண்பாடும். அந்த விதத்தில் அர்ஜூனர் தமது சந்தேகங்களுக்கு பதில் வேண்டி ஸ்ரீ கிருஷ்ணரிடம் ப்ரார்த்திக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரும் கூட ஏற்கனவே படித்து கடைபிடிக்கும் ஒருவருக்கு ஏற்பவே பதில்களை தருகிறார். என்றாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அர்ஜூனர், மேலும் மேலும் தொடர்ந்து சிறிய சிறிய எளிய சந்தேகங்களையும் கூட கேட்டு மேலும் தெளிவு பெறலாமே என்ற உணர்வுடன் கேட்டு தெளிவு பெறுகிறார். அதனால் நூலின் அமைப்பில் துவக்கத்தில் கஷ்டமான விஷயங்களை உடைய உரையாடலாகத் துவங்கி போகப் போக எளிய உரையாடலாக செல்கிறது. இப்போது இந்த நூலைப் படிப்பவர் ஒருவர் குருமுகமாக வேதங்களை நன்கு கற்று கடிபிடித்து வாழும் தவ வாழ்வில் இருப்பவர் என்றால் அதே வரிசையில் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இல்லாத பக்ஷத்தில்.....]

9.. முதலில்12ஆவது  அத்தியாயத்தில் படிக்கத் துவங்கவும், தொடர்ந்து 13, 14, 15, 16, 17, 18ஆவது அத்தியாயங்களையும், பிறகு 6, 7, 8, 9, 10, 11 ஆவது அத்தியாயங்களையும், பிறகு 2, 3, 4, 5 ஆவது அத்தியாயங்களையும், பிறகு 1ஆவது அத்தியாயத்தையும் படிக்கவும். இந்த முறை மிக சுலபமாக படிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கிறது.

10.. படித்த சுலோகங்களில் ü -குறியிட்டு வைக்கவும். மிகவும் பிடித்த, ஊக்கம் அளித்த, சந்தேகங்களை நீக்கிய, தெளிவுகொடுத்த சுலோகங்களை µ -குறியிட்டு வைக்கவும். பொருள் புரியாமல் தடுமாற்றம் இருக்கும் சுலோகங்களில் ? -குறியிட்டு வைக்கவும். தொடந்து படிக்கவும்.

11.. ஏதாவது மனக் கஷ்டங்கள் நேர்ந்த சமயங்களில் ஏற்கனவே குறித்திருக்கும் சுலோகங்களில் எது ஊக்கம் தரும் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துப் படிக்கவும். அல்லது வ்யாசாச்சாரியரையும், ஸ்ரீக்ருஷ்ணரையும் மனதில் ப்ரார்த்தித்து புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிக்கவும். அங்கே உங்கள் சூழ்நிலைக்கான பதில் இருக்கும்!

12.. ஏதாவது சுலோகத்தின் பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றால், அதனை சம்ஸ்க்ருதத்தில் கற்று மனப்பாடம் செய்துகொண்டு அடிக்கடி சொல்லலாம். அது மிகுந்த பலனைத் தரும்.  சம்ஸ்க்ருதத்தில் எப்படி சொல்வது என்று தெரியாத பக்ஷத்தில் உதவி தேவைப்படின் 9042600600 அல்லது 9042800800 ஏதாவது எண்களில் அழைத்து உதவி பெறலாம்.  உங்கள் நண்பர்களுக்கும் சொல்லலாமே!

உங்கள் பயணம் இனிதே அமைய ஆசிகள்...  !