Monday, 24 February 2020

இராமநாதபுரம் மாவட்டம் பற்றிய தகவல்கள்:

*இராமநாதபுரம் மாவட்டம் பற்றிய தகவல்கள்:*

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பால்க் நீரிணையில் தன பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.08.03.1985 தேதியிட்ட அரசாணை எம்.எஸ்.ந.347ன் படி, இராமநாதபுரம் 15.03.1985 அன்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.
24.07.2018 தேதியிட்ட அரசாணை எண்.270ன் படி, இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.

தற்போதைய இராமநாதபுரம் மாவட்டமானது ஒன்பது வட்டங்கள் கொண்டது.

புவியியல் இருப்பிடம்
இராமநாதபுரம், 90 05′ மற்றும் 90 50′ வடக்கு அட்சரேகைகளுக்கும் 780 10′ மற்றும் 790 27′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்கே விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும் வடக்கில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன. கிழக்கில் பால்க் நீரிணையும் தெற்கில் மன்னார் வளைகுடாவும் அமைந்துள்ளன.

பொதுவான காலநிலை
மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஒரு உலர்ந்த, வெப்பமான வானிலையே காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழைக்காலமான நவம்பர் மற்றும் டிசம்பரில் வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது.

மக்களும் கலாச்சாரமும்
சங்க கால பாரம்பரிய தமிழ் இலக்கியம், நாட்டின் நில வகைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக இயற்பியல், புவியியல் மற்றும் மக்களின் வாழ்வியல் அடிப்படையில் பாகுபாடு செய்துள்ள்ளது. இந்த இயற்கை அடிப்படையான நில வகைப்பாடின் மூலம் நிலத்தைச்சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும் இயற்கையைச்சார்ந்த உறவு பற்றி நாம் அறிய முடிகிறது.

ஐந்து நிலத்திணைகளில் பாலை நிலத்திற்கென்று சில அடிப்படை குணமுண்டு. மணற்குன்றுகள் நிறைந்த இடம் என்று சொல்வதை விட முல்லையும் குறிஞ்சியும் இயல்பு திரிந்த நிலப்பரப்பு என்று சொல்லலாம். பிரிவும் பிரிவு சார்ந்த துயரமும் இந்நிலப்பரப்ப்பிற்கான மக்களின் ஒழுக்கம் ஆகும். கொற்றவை அல்லது காளி இந்நிலத்திற்கான தெய்வம் ஆவாள். மற்ற காவல் தெய்வங்கள் வழிபாடும் உண்டு.

*காணத்தக்க இடங்கள்:*

*இராமநாத சுவாமி திருக்கோவில்:*

இராமநாதசுவாமி கோவில் ஒவ்வொரு சுற்றுலாப்பிரியரின் விருப்பமாகும். இக் கோவில் அற்புதமான அமைப்பு, நீண்ட தாழ்வாரங்கள், கலையுணர்வுடன் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் உயர்ந்த 38 மீட்டர் கோபுரம் கொண்டது.

இக்கோவிலின் கட்டிடப்பணி 12 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மறவரால் தொடங்கப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்றாவது பிரகாரமானது அவரது வாரிசுகளால் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான பிரகாரமும், உலகின் மூன்றாவது பெரியதுமான இது, கிழக்கில் இருந்து மேற்காக 197 மீட்டரும் மற்றும் வடக்கு தெற்காக 133 மீட்டரும் கொண்டது. கி.பி.1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்க வழிபாட்டுத் தலங்களுள் முக்கியமானதாகும். இங்கு சிவபெருமான் ஜோதிலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்.

இராமபிரான் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நேரத்திற்குள் சிவ வழிபாடு செய்ய ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர நேரமானதால் சீதை ஒரு லிங்கத்தை உருவாக்கி இராமபிரான் வழிபட ஏற்பாடு செய்தார். இந்த லிங்கம் தான் இராமநாத சுவாமி என்று கோவிலில் வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தெய்வம் ஆகும். அனுமனை சமாதானம் செய்ய அவர் கொண்டு வந்த லிங்கமும் சற்று வட திசையில் அமைக்கப்பட்டது. மேலும், அனுமனின் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதலில் பூசை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

*அக்னி தீர்த்தம்:*

கோவில் கோபுரத்திற்கு முன்னால் சுமார் 100 மீ. தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற கடல் பகுதியான அக்னி தீர்த்தம் மிகப்புனிதமாகக்கருதப்படுகிறது. இந்தபுனித நீராடுதல் பாவங்களை நீக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். மற்ற முக்கிய தீர்த்தங்களாகப்பக்தர்களால் கருதப்படுபவை கோவிலுக்குள்ளும் கோவிலைச்சுற்றியும் அமைந்துள்ளன.

*பாம்பன் பாலம்:*

மன்னார் வளைகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது. இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப்போலவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான 2.3 கி.மீ கடல் தொடருந்து பாலமும் அதன் வித்தியாசமான கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

*தனுஸ்கோடி:*

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையானது தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. இது 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளாக்கப்ப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.

*Dr. APJ. அப்துல் கலாம் மணி மண்டபம்:*

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஷில்லாங்கில் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட அன்னாரது திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

*தேவிப்பட்டினம் (நவபாஷாணம்):*

கடற்கரை கிராமமான இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

*திருப்புல்லாணி:*

தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து 10.2 கி.மீ தொலைவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட வேண்டி சமுத்திர இராஜனை வணங்கி தர்ப்பை புல்லின் மீதமர்ந்து தவம் செய்ததினால் இவ்வூர் தர்ப்பசயனம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

*திரு உத்திரகோசமங்கை:*

திருஉத்திரகோசமங்கை
இராமநாதபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள உத்திரகோசமங்கையில் மிகப்பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள மரகதத்தாலான நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

*ஏர்வாடி தா்ஹா:*

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிலிருந்து கண்ணனூர் வழியாக இந்தியா வந்த சுல்தான் இப்ராகிம் சையது அவுலியாவின் கல்லறை இங்கு உள்ளது. இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

*கோதண்ட ராமர் கோவில்:*

இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத்தலமாகும்.

இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணருக்கு இராமர் ஆறுதல் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு சான்றாக இக்கோவில் சுவற்றிலிருக்கும் ஓவியத்தை சொல்லலாம்.

*காந்தமதனா பர்வதம்:*

காந்தமதனா பர்வதம் என்பது இராமநாதசுவாமி கோவிலிற்கு வடக்கில் உள்ள சிறிய மலைப்பகுதியாகும். 3 கிமீ தொலைவில், நடந்து சென்று அடையக்கூடிய வகையில் உள்ள இந்த இடம், இராமேஸ்வரத்தின் மிகவும் உயரமான இடமாகும்.

காந்தமதனா மலையின் உச்சியில் ராமர் பாதம் என்றழைக்கப்படும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில், இராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

காந்தமதனா மலைக்கு செல்லும் வழியில் உள்ள கோவில் உள்ள இடத்தில் தான், இராவணன் சீதையைக் இலங்கைக்கு கடத்தி சென்ற போது தடயத்திற்காக சீதை எறிந்த அணிகலனை அவரைத் தேடி வந்த அனுமான் கண்டெடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

*பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்:*

ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த கோவிலுக்கு வெளியிலிருக்கும் மிதக்கும் கல்லாகும்.

இராவணன் வசித்து வந்த இலங்கை செல்வதற்காக அனுமான் மற்றும் பிற வானர இராணுவ வீரர்களால் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதியாகவே இந்த கல் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அனுமான் தன்னுடைய ஐந்து முகங்கள் அல்லது ஐந்து வித வடிவங்களையும் காட்டிய இடமாக இந்த இடம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்குதான், இராமர் அனுமனுக்கு செந்தூர பொட்டினை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
புராணங்களின் படி, அனுமான் தான் சீதாவைக் கண்டுபிடித்த நல்ல செய்தியை இவ்விடத்தில் வைத்து தான் இராமரிடம் சொன்னார். இந்த இடத்தில் அனுமான் தான் கொண்டு வந்திருந்த 'சாட்சி'களான சீதா தேவியின் சூடாமணி அல்லது ஆபரணங்களை வைத்து இந்த செய்தியை இராமரிடம் கூறினார். மேலும், இந்த செய்தியை கேள்விப்பட்ட இராமர் தன்னுடைய மனைவி உயிருடனிருப்பதை அறிந்து மகிழ்ச்சியால் அழுததாகவும் நம்பப்படுகிறது.

இந்த இடத்தில் தான், கடுமையான சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கிடையில் சீதாவை கண்டறிந்து வரச் சென்ற அனுமானை தன்னுடைய உண்மையான 'பக்தர்' என இராமர் கூறினார். இந்த கோவிலுக்கு இராமர் மற்றும் அனுமானின் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து செல்வார்கள்.

பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் இங்கு இறங்கி தங்களுடைய பிரார்த்தனைகளை நடத்திச் செல்கின்றனர். அனுமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படும் செவ்வாய் கிழமைகளில், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

*அரியமான் கடற்கரை:*

சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் இராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது.

அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தங்களுடைய வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வரும் கடற்கரையாகவும் அரியமான் கடற்கரை உள்ளது. நீலக்கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக் கூடிய அழகிய கடற்கரையாக அரியமான் கடற்கரை உள்ளது.

நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150மீ அகலமும், 2 கிமீ நீளமும் உடையதாகும்.

அரியமான் கடற்ரையின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனர், சவுக்கு மரங்களை கடற்கரையில் நட்டுள்ளார். மேலும் குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடிமின்னல், நீர்ச்சறுக்கு மற்றும் இதர விளையாட்டுகளையும் இங்கு ஏற்படுத்தியுள்ளார்.

சுற்றுலா செல்பவர்களின் சுற்றுப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிடவே இந்த வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

*நீர் பறவை சரணாலயம்:*

இராமநாதபுரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் எல்லா பறவை பிரியர்களையும் கவரும் சரணாலயமாகும்.

நீர் பறவை சரணாலயத்தில் உள்ளூர் மற்றும் இடம் பெயரும் வகை பறவைகள் பலவற்றையும் காண முடியும். இங்கு காணப்படும் உள்ளூர் பறவைகள் வருடம் முழுவதுமே உணவிற்காக இந்த சரணாலயத்திற்கு வருகை தரும்.

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. வழக்கமாக இந்த பறவைகள் வடகிழக்கு பருவக்காற்று காலத்திலேயே இங்கு வருகை தருகின்றன.

நீர் பறவை சரணாலயத்தில் அரியவகை மற்றும் தனித்தன்மையான பறவைகளை நீங்கள் காண முடியும். உலகம் முழுவதும் உள்ள பறவை பிரியர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கிருக்கும் பறவைகளின் குணாதிசயங்களை கவனித்து செல்கின்றனர்.

பறவைகள் தங்களுக்கு பிடித்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு வந்து செல்லும். அந்த இடங்களை இங்குள்ள அதிகாரிகளும் சுற்றுலா வசதிக்காக குறிப்பிட்டு வைத்திருப்பார்கள். நாம் அதன் மூலம் எளிதாக பறவைகளை அடையாளம் காணமுடியும்.

பறவைகள் சரணாலயத்தில் வழக்கமாக அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெருவாரியான பறவைகள் வந்து குவியும். எனவே அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு சுற்றுலா செல்பவர்கள் பறவைகளையும் கண்டு ரசிக்கமுடியும்.

*நன்றி.*🙏🏽