Tuesday, 12 October 2021

பெருமாளின் அற்புதங்கள்

செல்வம் எப்படி குவிகின்றது, செல்வந்தன் எப்படி உருவாகின்றான் என்பதை கூர்ந்து கவனித்த இந்து சமூகம், ஓசைபடாமல் சில முடிவுகளுக்கு வந்தது

செலவந்தன் என்பவன் பல பூக்கள் இழந்து உருவாக்கும் தேன் கூடு போல ஏராளமான ஏழைகளின் பணத்தை அவர்களுக்கு தெரியாமலே எடுத்து செல்வத்தை குவிக்கின்றான் என்பதை கண்டு கொண்டது

ஒரு மனிதனின் தேவை அல்லது ஆசையினை பயன்படுத்தி அவனிடம் இருப்பதை எடுத்து சேர்ப்பதே செல்வம் என அறுதியிட்டு உணர்ந்தது

இதனைத்தான் 19ம் நூற்றாண்டில்  கார்ல் மார்க்ஸ் சொன்னான், ஏஞ்சல்ஸ், இங்கர்சால் என யார் யாரோ ஐரோப்பாவில் சொன்னார்கள், இதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்த மதம் இந்துமதம்

ஆனால் உடனடியாக புரட்சி செய், அடித்து பிடுங்கு, பொதுவுடமை என அது இறங்கவில்லை, அது மானிட சுபாவத்தை இன்னும் கூர்ந்து நோக்கியது

இவ்வுலகில் பல விஷயங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை என்பதை உணர்ந்தது அம்மதம், காட்டில் புலிக்கு மான் ஏன் உணவு என்பதில் தொடங்கி மானிடரில் ஒரு சிலருக்கு மட்டும் பெரும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் பெருகுவது எப்படி என்பது வரை பல விஷயங்கள் புரிவதில்லை

ஆனால் ஒரு மானிடன் சக மானிடர்கள் தன் கைபொருளை உழைப்பை கொடுத்து அவனை செல்வந்தனாக்குவது சூழ்நிலை அல்லது ஒரு அறியாமை என முடிவுக்கு வந்தார்கள்

இந்த சூழலும் அறியாமையும் கர்மாவாலோ கிரகபலன்களாலோ உருவாவதை கணித்தார்கள், செல்வம் சேர்ப்பவனுக்கு தெளிவும் தந்திரமும் இருப்பதை உணர்ந்தார்கள்

இவ்வுலகில் அஷ்ட லஷ்மி என ஏன் இந்துக்கள் சொன்னார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் இந்த எட்டு வகை ஆசிகளில் ஏதோ ஒன்று கண்டிப்பாய் இருக்கும்

அந்த ஆசி இல்லா மனிதனே இல்லை, பரம்பொருள் அப்படித்தான் படைத்திருக்கின்றான்

நோயில்லா நிலை, தானியம் நிறைந்திருப்பது, எதிர்ப்புகளை சமாளிக்கும் தைரியம், வாழ்வின் நற்பேறுகள் (நன்மனைவி, நல்ல பிள்ளைகள் என 16 வகை), தீரா புகழ்,  எடுக்கும் காரியத்தில் சித்தி, கலை மனோபாவம், செல்வம் தொடர்ந்து பெருகும் வழி என எட்டு ஆசிகள் உண்டு

இந்த எட்டு வகை செல்வத்தை கொடுப்பவளை அஷ்ட லட்சுமி, எட்டு ஆசிகளையும் தரும் லட்சுமி என்றார்கள்
ஆதிலட்சுமி, தானிய லட்சுமி,  வீர லட்சுமி, கஜலட்சுமி (யானை போல அள்ளி தருபவள்), சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி

இதில் எல்லோரும் ஒரு ஆசியாவது பெற்றிருக்கின்றார்கள் ஆனால் அது எது என்பதை தெரியா வகையில் அவர்கள் அறிவு மறைக்கபட்டிருகின்றது, அந்த அறிவினை திறந்து கொடுத்தாலும் அவர்கள் கர்மா அதை விடுவதில்லை

இது கல்வியால் மாறும், அடித்தால் மாறும், தெளிந்த போதனை சொன்னால் மாறும் என்பதல்ல, இது அவரவர் கர்ம பலன்

உதாரணம் இந்தியாவின் தமிழகத்தில் பல காட்சிகள்

அங்கே கூலி தொழிலாளியும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றான், ஆனால் அதில் பாதியினை டாஸ்மாக் கடையிலே அழித்துவிடுகின்றான் மீதி என்னாகின்றது என்பது அவனுக்கே தெரியவில்லை

இந்தியா சுதந்திர நாடு, அவன் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனால் காசுக்கும் பிரியாணிக்கும் மயங்கி தன் வோட்டினை நாசமாக்குகின்றான். இது நம்மை ஆளும் அரசை தேர்ந்தெடுக்கும் காரியமல்லவா எனும் அறிவு அவனுக்கு இல்லை, அதை சொன்னாலும் புரியாது

சினிமா நட்சத்திரங்கள் நம்மை போல் மனிதர்கள் என்பதை அறியாமல் ஆயிரமாயிரம் ரூபாய்களை அள்ளி எறிகின்றான், அந்த நடிகனும் நடிகையும் இயக்குரும் கோடியில் குளிக்கின்றார்கள், இதெல்லாம் யார் பணம்?

ஆம், நடிகரும் நடிகையரும் தமிழ்நாட்டில் ரசிகர்களை ஒரு வித மயக்கத்தில் வைத்திருக்கின்றார்கள் அல்லவா? சொன்னாலும் ரசிகனுக்கு புரியாது அல்லவா? இதுதான் நடிகனுக்கு வாய்த்த லட்சுமி கடாட்சம்

தமிழக கட்சிகள் இன்னும் மிகபெரிய உதாரணம்

(ஆனால் அவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் அதனால்தான் மக்கள் பணம் மக்களுக்கே என தேர்தல் நேரம் கொஞ்சமாவது கொடுக்கின்றார்கள், இந்த திரை நட்சத்திரங்கள்தான் மகா மோசம்)

இன்னும் ஏராளம் சொல்லலாம், வெளிநாட்டு மது முதல் கார் வரை தன் உழைப்பை எல்லாம் கொட்டி வாங்கும் இந்தியர்கள் நிலை அதுதான், வெள்ளையனின் வியாபார தந்திரம் அது

காபி முதல் குளிர்பானம் வரை தேவையே இல்லாமல் மனிதன் வாழமுடியும், ஆனால் இந்தியர்கள் வெள்ளையனுக்கு அறவிடும் பணம் என்ன?

இன்னும் தெளிவாக சொல்ல உலக விஷயங்களுக்கு செல்லலாம்

அரபுநாடுகள் செல்வந்த நாடுகள் ஆனால் அவர்கள் பணமெல்லாம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கவும் பாதுகாப்பு வாங்கவும் செலவழிக்கபடுகின்றது, ஏன் என அவர்கள் சிந்திப்பதே இல்லை அவர்கள் அறிவு அவ்வளவு மயங்கிற்று, நமக்குள்ளே ஒற்றுமை என்றால் ஏன் இந்த செல்வம் அமெரிக்காவுக்கு செல்லும் என சிந்திப்பார்களா?

ஆப்ரிக்கா ஆப்கன் முதல் எல்லா நாட்டின் நிலமை அதுதான்

ஆம், எவ்வளவு சொன்னாலும் புரிகின்றவனுக்குத்தான் புரியும் இதன் பெயர்தான் லட்சுமி கடாட்சம்

ஆனால் இப்படி அறியாமையிலும் சில தேவையிலும் இருப்பவர்களிடம் சம்பாதிப்பது தவறு என உணர்ந்த இந்துமதம் அந்த பாவத்தை போக்க சில வழிகளை போதித்தது

செல்வத்தின் பயன் ஈதல் என அது சொல்லிற்று. செல்வம் அறகாரியங்களுக்கும் இறைபணிக்கும் செலவழிக்கபடாவிட்டால் அதனால் பலனில்லை என சொல்லிற்று

இந்துமதம் பலவித அறங்களை, கொடைகளை, தான தர்மங்களை செய்ய ஊக்குவிப்பதே செல்வந்தரிடம் உள்ள பாவங்கள் கரையவே

அறம் செய்யா செல்வம் குலநாசம் செய்யும், இதை சிலப்பதிகாரம் தெளிவாய் சொல்லும்

"ஊழ்வினை உறுத்த" என இளங்கோவடிகள் சொன்னது கோவலலின் முற்பிறவியினை அல்ல, அது அவன் வம்சம்  செய்த வினை

அவன் முன்னோர்கள் வணிகர்கள், கண்ணகியும் வணிக பரம்பரையே. அவர்கள் ஏமாற்றி சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அறியாமல் வரும் பாவம் வணிகம், அந்த வணிக பலனை முறையாக தானம் செய்து  பாவ கணக்கை தீர்க்காவிட்டால் அது பெருகி வம்சத்தை பாதிக்கும்

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்தது, பட்டினத்தாருக்கு நடந்தது இன்னும் யார் யாருக்கெல்லாமோ வரலாற்றில் நடந்தது சாட்சிகள் ஏராளம்

ஆம், வணிகத்தில் பெருகும் செல்வம் இன்னும் பல விஷயத்தில் பெருகும் செல்வம் பாவம் நிறைந்தது. யாருடைய அறியாமையிலோ இங்கே குவிவது. அதை முறையாக தான தர்மம் செய்யாவிட்டால் குல நாசம் செய்யும்

இதனாலே எந்த மதத்திலும் இல்லாதபடி இந்து ஆலய சடங்குகளும் வழிபாடும் மிக பிரமாண்ட செலவு பிடிக்கும் விஷயங்களாயின‌

அன்னதானம், உபயம் என செல்வந்தனின் பணம் செலவழிக்க வழிகளை சொல்லி கொடுத்து கொண்டே இருந்தார்கள்

சத்திரம் கட்டுதல், உணவளித்தல், கல்வி கொடுத்தல், ஏழை பெண்களுக்கு தாலி தானம், அந்தணருக்கு கொடைகள், முன்னோர் வழிபாடு என தான தர்மங்கள் செய்தல், கோவில் கட்டுதல், குளம் வெட்டுதல் என குவிந்த செல்வம் நல்வழியில் சென்று பாவத்தை தீர்க்க அது வழியும் சொன்னது

ஆம்,லட்சுமியின் அருளில் செல்வம் குவியும், குவிந்த செல்வத்தை நல்வழியில் செயல்படுத்தினால் காலத்தை வென்று நிலைக்கலாம், மாறாக சுயநலத்தில் தனக்கும் தன் வம்சத்துக்கும் என குவித்து தான தர்மங்களை மறந்தால் அது நாசமே விளைவிக்கும்

நல்வழியில் செலவழிக்கா செல்வம் என்னாகும் என்பதை நாய் பெற்ற தேங்காய் என இந்துமதம் சொல்லிவிட்டு நகரவில்லை, அச்செல்வம் என்னாகும் என்பதை பல இடங்களில் சொல்லிற்று, இந்த விவேக சிந்தாமணி பாடல் கூட அதுதான்

சிந்தாமணி செல்வம் என்றொரு சிறுநூல் உண்டு, அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள்

அன்னையே அனைய தோழி!
அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்
உரைதெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்குப்
பேரின்பம் நல்கி
பொன்னையும் கொடுத்துப் பாதப்
போதினில் வீழ்வ தேனோ?

அதாவது ஏ தோழியே, நீ உண்மை அறிந்தவள் என்பதால் ஒன்று கேட்பேன் தெளிவாய் சொல்வாய். என்னிடம் வருபவர்கள் எனக்கு உடல் இன்பத்தையும் கொடுத்து எனக்கு பொருளும் கொடுத்து என் காலில் விழுந்து கிடப்பது ஏன்?

தோழியின் பதில் இப்படி வரும்

"பொம்மெனப் புடைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே!
கூறுவேன் ஒன்று கேண்மோ!
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே.."

அதாவது மன்மதனும் மயங்கும் அழகானவளே, அதன் பொருள் கேள், செம்மையான தானம் தர்மம் அறசெயல்கள் செய்யாதோர் செல்வம் சிதறி அழிய வேண்டி பரத்தையராகிய நம்மையும், கள்ளையும், சூதையும்பிரம்மன் படைத்தான். நல் வழியில் செலவழிக்கா செல்வம் இப்படித்தான் அழியும்

ஆம், இதில் கள், மது, மாது மட்டுமல்ல, அரசு ஆசை, பதவி வெறி, தகப்பன் சொத்து வெட்டுகுத்து என காட்சிகள் நீளும்

இதை அறுதியிட்டு சொல்லும் இந்துமதம், அது அக்காலம் முதல் எக்காலமும் உண்டு. பழைய வரலாற்றை புரட்டுங்கள் தெருவுக்கு 4 சாட்சி உண்டு, நீதிமன்றங்களில் கோடி சாட்சி உண்டு

இதனாலே "அறம் செய்ய விரும்பு" என்றார்கள் இந்துக்கள்

அதற்காக தகுதி இல்லாதோருக்கு அது அள்ளி கொடுக்க சொல்லவில்லை "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்றது, தகுதி உள்ளோருக்கு மட்டும் கொடுக்க சொன்னது

காரணம் செல்வந்தனை சுற்றி காக்கா கூட்டம் போல் துதிபாடிகளும் வஞ்சக நரிகளும் சூழ்ந்திருப்பார்கள், அவர்கள் செல்வந்தனின் செல்வத்தினை கொத்தி போக தயாராய் இருப்பார்கள், அவர்களை தாண்டி யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவ சொன்னது இந்துமதம், இதனாலேதான் கோவில் காரியங்களை அது முன்னிறுத்திற்று

லட்சுமி கடாட்சம் என்பது ஒரு சோதனை, கொடுக்கும் செல்வத்தில் ஒருவன் தான தருமம் செய்கின்றானா, இறை காரியம் செய்கின்றானா என வைக்கபடும் சோதனை

அதில் ராஜராஜசோழனை போல் கோவில் கட்டியவர்கள், குளம் வெட்டியவர்கள், சுலோச்சன முதலியார் போல் பாலம் கட்டியவர்கள், வ.உ சிதம்பரம் போல் நாட்டுக்கு இழந்தவர்கள்.  செட்டிநாட்டு தனவான்களை போல் திருப்பணிகள், கல்விபணி செய்தால் காலமும் நிலைப்பார்கள்

எத்தனையோ தொழிலதிபர்கள் இன்று இருக்கலாம் ஆனால் காலம் அடுத்த சில தசாப்தங்களில் அவர்களை வீசி எறியும், ஆனால் அவர்கள் இறைபணியோ அறபணியோ செய்திருந்தால் காலத்தால் கூட அவர்களை தொடமுடியாது

சினிமா தயாரிப்பாளர் ஆயிரம் இருந்தாலும் சின்னப்பதேவர் போன்றோர் அவர்கள் கோவில்பணியில்தான் வாழ்கின்றார்களே அன்றி செல்வத்தின் பெயரால் அல்ல

இதனால் செல்வத்தின் பலன் வறியோருக்கு ஈகை செய்து பலனடைவதே என வலியுறுத்தியது இந்துமதம்

ஆம், மானிடனுக்கு பலவீனம் உண்டு. இங்கு செல்வம் என்பது அறியாமை மக்களிடம் இருந்து பெறபடுவது அவர்களை சொல்லி திருத்த முடியாது, அடித்தும் திருத்தமுடியாது அவனின் அறிவும் அறியாமையும் கர்ம பலனும் அப்படி

இதனாலே வலிய பொதுவுடமை என திணிக்கபட்ட சோவியத் சிதறியது, வடகொரியா அழுகின்றது, சீனா உடைய காலம்பார்க்கின்றது, கியூபா திணறுகின்றது

ஏன் இப்படி ஆயிற்று? மானிட சுபாவத்துக்கு எதிரான எதுவும் நிலைக்காது

இந்துமதமோ மானிடனின் சுபாவம் , சிந்தனை, மனோபாவம் என எல்லாம் உணர்ந்து போதித்த மதம் என்பதால் செல்வத்தின் பலன் ஈவது என காலத்துக்கும் பொருந்திய தத்துவத்தை சொன்னது

செல்வம் என்பது கீதையில் வரும் தமஸ் எனும் சோம்பேறி குணத்தை கொடுத்துவிடும், எமக்கு எல்லாம் உண்டு இனி என்ன வேண்டும் எனும் மமதையினை கொடுக்கும், அந்த மாம்தை ஞானத்தினை அருளாது

அதை நீர்போல் ஓடவிட்டு தேடிகொண்டே இருந்தால் ஒரு இடத்தில் ஞானம் கிடைக்கும், பணத்தாலும் செல்வத்தாலும் வாங்கமுடியா விஷயம் உண்டு அது பிரபஞ்சத்தால் மட்டும் கிடைக்கும் எனும் தெளிவு கிடைக்கும்

சில நேரங்களில் தகுதியற்றோருக்கு செல்வம் குவியும், அவர்கள் பாவம் மேல் பாவம் செய்தாலும் செல்வம் குறையாது, அந்நேரம் சிலர் தெய்வமில்லை கடவுள் இல்லை என அவநம்பிக்கை கொள்ளலாம்

மனிதனின் காலம் குறுகியது ஆனால் தெய்வத்தின் காலமும் சக்தியும் முடிவில்லாதது, அதன் கணக்குகள் மானிடருக்கு புரியாது

தகுதியற்றவனிடம் குவியும் செல்வம் அவன் பரம்பரையில் யாரோ வந்து அறகாரியங்கள் செய்து இறைவனை அடைவார்கள் என்பதற்காக கொடுக்கபடுவது என்பது மானிட கண்களுக்கு புரியாது

பட்டினத்தார் முதல் காரைக்கால் அம்மையார் வரை இந்து புராணங்கள் ஏகபட்ட இடத்தில் சொல்வது அதுதான்,  செல்வம் ஒருவனுக்கு கொடுக்கபடுவது அவனுக்காக அல்ல, அவன் வெறும் கருவி அவன் சந்ததி என்னாகும் என்ன செய்யும் என்பது ஆண்டவன் ஒருவனே அறியும் கணக்கு, இதில்தான் இந்து சமூகம் அமைதி கொள்கின்றது

செல்வம் இருபுறம் கூரான கத்தி போன்றது, அதை கவனமாக கையாண்டவர்கள் ஞானம் பெற்று முக்தி அடைவர், அதை செய்யாதோர் மறுபடி மறுபடி பிறந்து உழல்வார்கள்

பிச்சைகாரர்களோ யாசகம் பெற வருபவ‌ரெல்லாம் உன் கர்மம் கழிய உன்னிடம் கைநீட்டுவார்கள், அவர்களுக்கு மறுக்காதே என வலியுத்த தெய்வங்களே பிச்சை கேட்டு வரும் எனும் தத்துவத்தையெல்லாம் புராண சாட்சிகளாக வைத்தவர்கள் இந்துக்கள், அந்த அளவு தர்மத்தை வலியுறுத்தினார்கள்

தகுதியான விஷயங்களுக்கு தானமும் அறமும் அள்ளி செலவிடுங்கள், செல்வம் என்பது அறியா மக்களிடம் இருந்து தந்திரமாக பிடுங்கும் குவியல் அது பாவமும் சாபமும் கொடுக்குமுன் கொடையாக கொடுத்துவிடுங்கள் என்றது இந்துமதம்

இதற்கு மகாபாரத கர்ணனை காட்டிற்று, அவன் துரியன் கொடுத்த கெட்ட செல்வத்தை எல்லாம் அள்ளி எரிந்ததால்தான் விஸ்வரூப தரிசனம் பெற்று, பகவானை முழுக்க தரிசித்து நிம்மதியான மரணம் எய்தினான்

ஆனால் துரியன் உள்ளிட்டோர் வாழ்வு நிம்மதியாய் முடியவில்லை

தர்மம் செய்வதன் சக்தி அது, அதை செய்து செய்து பாவம் கழித்து பகவான் பாதம் சரணடைந்து நிம்மதி பெறுவதே லட்சுமி வழிபாடு

Tuesday, 14 September 2021

நல்ல தண்ணீா் ஊற்று கண்டறிய...

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

Monday, 30 August 2021

மொட்டை போடுவதன் காரணம்

*மொட்டை போடுவதன் காரணம்-*
                                                               *உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*

*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*

*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.*

*ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.*

*இதனை சிலர் கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?'  என்றும் ,*

*'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.*

*முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?'  என்று கிண்டலடிப்பார்கள்.*

*யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.*

*மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.*

*இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.*

*மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .*

*அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான்  அஸ்வத்தாமன்.*

*குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.*

*அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.*

*அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.*

*ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,*

*நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.*

*ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.*

*ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.* *எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.*
*வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.*

*ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.*

*யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ,மற்ற மதமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.*
*தனிமனிதனின் தவறுக்காக,எந்த ஒரு மதத்தையும் இழிவாக்குவது,*
*இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!*
*அதுபோல் பெண்கள் சிறு பிராயத்தில் இருக்கும் போது மொட்டை போடலாம், பெரியவர்கள் ஆன பின்பு மொட்டை போடுவது தவறு , அது போல் அங்கபிரதஷணம், செய்வதும் தவறு ,பெண்கள் பஞ்ச அங்க நமஸ்காரம் மட்டுமே செய்கிறார்கள் , ஏனென்றால் பெண்களின் மார்பகங்கள் நமஸ்காரம் செய்யும் போது பூமியில் படக்கூடாது , பெண்களை நமது கலாச்சாரம் உயர்வாக கருதுகிறது,

இப்படி இருக்கையில் அங்கபிரதட்சணம் செய்தால் பலமுறை மார்பக பகுதி பூமியில் படும், ஆதலால் தான் பெண்கள் அங்கபிரதட்சணம் செய்வதை தவிர்க்க வேண்டும், மேலும் கர்பப்பை நகர்ந்து பல பிரச்சனை உருவாகும், இதன் கரணமாகவே சூரை தேங்காய் உடைப்பது, பூசணிக்காய் உடைப்பது ,அங்கபிரதட்சணம் செய்வது, மொட்டை போடுவது இவற்றை எல்லாம் தவிர்ப்பது நன்மை பயிக்கும்.  நுனிமுடி கொடுக்கலாம் அதுவும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறிதாக நுனிமுடியை கத்தரித்து ,மஞ்சள் துணியில் முடிந்து வைத்து அதை காணிக்கையாக விரும்பும் கோவிலில் செலுத்தலாம்.*

*பெண்கள் நாட்டின் கண்கள் என்று எல்லோரும் போற்றுகிறோம், மேற்கூறிய விஷயங்களை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும். வீட்டின் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும், நமது பாரம்பரிய கலாச்சாரத்தினை பேணி காக்க வேண்டும்.*