Sunday, 5 August 2018

இராஜ்குமாா் கவிதை...

எரிந்த உடலில்
எஞ்சிய உயிர்...

முறிந்த எழும்பில்
முளைக்கும் வலி...

சொரிந்த புண்ணில்
சொட்டும் குருதி...

உரிந்த தோளில்
உதிரிச் சதை...

அச்சமோ அருவறுப்போ
அரங்கேற வாய்ப்பில்லை..!
உச்சமான உறுதிக்கு
உபயம் செய்த பணியிது..!

துச்சமோ துயரமோ
துவண்டுவிட வாய்ப்பில்லை..!
துள்ளியெழும் அலையாக
துணிச்சலான அணியிது..!

சகலப் பிணிகள்
சங்கமிக்கும் உடலை...
சலவை செய்வோம்
சமத்துவச் சேவையாய்..!

மரணப் பூக்கள்
மணக்கும் உலகில்...
மனிதம் காப்போம்
மருத்துவச் சேனையாய்..!

உடன்பிறப்பு என்றுதான்
உரைப்பார்கள் எவருமே...
உதவும் பண்பினை
உழைப்பில் புகுத்தியதால்..!

கடன்பட்டோம் என்றுதான்
கதைப்பார்கள் இன்றுமே...
கருணை குணத்தை
கடமையில் செலுத்தியதால்..!

உடை எப்படியோ
உள்ளமும் அப்படி..!
அன்ன நிற மேகம்
அன்பு மழை பொழியும்..!

கனிவு எப்படியோ
கண்டிப்பும் அப்படி..!
உணவை மறுக்கும் குழந்தையை
உண்ண வைக்கும் கோபம்..!

யாதும் ஊரே
யாவரும் கேளீர்..!
இவ்வாசகம் எங்கள்
இதயத் துடிப்பாக..!

பேரு தெரியாத
பேரளவு கூட்டத்தை...
பேச்சோடு நிற்காமல்
பேணிடுவோம் தாயாக..!

ஊறு விளைவிக்கும்
ஊருபட்ட கிருமிக்கு...
ஊசிமுனை மருந்தால்
ஊதப்படும் சங்கு..!

கூற முடியாத
கூடல் உறுப்பு..!
சிகிச்சை அளிப்போம்
சிரத்தையோடு அங்கு..!

காலன் வருவதை
காலதாமதம் ஆக்கிவிட...
வேகமான முதல் உதவி
வேங்கையென நாங்கள்தான்..!

பாதித் தாய்மைக்கு
பால் கொடுக்க தெரியாது..!
பாடம் நடத்துகின்ற
பாசமலரும் நாங்கள்தான்..!

பிறந்த குழந்தை
பிம்பம் பார்க்கும்
முதல் கண்ணாடி
எங்கள் கண்கள்தான்..!

இறந்த ஆன்மா
இறைவனைச் சேர...
முதல் கண்ணீரும்
எங்கள் கண்கள்தான்..!

வரம் பெற்ற
வாய்ப்பாகவே கருதுகிறோம்..!
பிறர் நலம் பேணும்
நம்பிக்கை நாங்களாக..!

பயன் பெற்ற
பலருக்கும் தெரியும்..!
இது பணி அல்ல
பணிவிடை என்று..!

இது பணி அல்ல
பணிவிடை என்று..!!!