TAMILNADU Govt NURSEs Association வரலாறு ( திருமதி.க.பாப்புராஜன் அம்மையார் முன்னால் மாநில பொதுச்செயலாளர் TGNA ,13.06.1987-ல் வெள்ளி விழா பதிப்பிலிருந்து ) (பாகம் 01/2016 நாள் 31.10.16 ) என் இனிய சகோதரியே இன்னும் எத்தனை நாளம்மா ? அன்றொருநாள் 1960-ம் ஆண்டிலேயே அருமை நர்சு சமுதாய சகோதரிகளும்,சகோதரர்களும் வார்டுகளில் அங்குமிங்கும் ஓடியாடி மிகவும் கவனத்துடனும், சுறுசுறுப்புடனும் மிகுந்த கனிவுடனும் பிணியாளர்களின் துயர் நீங்க பணிபுரிகின்றனர். அவ்வேளையிலே வார்டிற்குள் நுழைந்த மருத்துவர், அறியாமல் நடந்த சிறு பிழை கண்டு கோபங்கொள்கிறார் . நர்சுகளை நோக்கி வசைமாரிப் பொழிகின்றார். இன்முகம் கொண்ட இனம் சந்ததியினர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தாங்கள் அணிந்த சீருடையின் வெண்மை நிறத்தைப் போன்றே வெள்ளை உள்ளம் கொண்டோராய் எதனையும் கருத்தில் கொள்ளாது "பிணியாளர் சேவையே பிறப்பிளான் சேவை " என்னும் முதுமொழிக்கேற்ப தமது சேவையினைத் தொடர்கின்றனர். நாட்கள் நகர்கின்றது, நர்சுகள் சமுதாயம் தமிழகத்திலே ஒரு நசுக்கப்பட்ட சமுதாயமாகவே நடத்தப்படுகின்ற அவலநிலை தொடர்கின்றது. எண்ணத் தொடங்கினர் அண்ணன் எட்வர்ட் அவர்களும் ,அண்ணன் பாலசுந்தரம் அவர்களும் எடுத்துரைத்தனர். அவர் தம் கருத்தினை ஏன் நமக்கு (நர்சுகளுக்கு) என்று ஒரு சங்கம் தமிழகத்தில் அமைத்துக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டனர் இக்கருத்தினை அருமை சகோதரர்கள் திரு. P.சீனிவாசன் மற்றும் திரு.காமாட்சிநாதன் போன்றோர்கள் திரு.சோமசுந்தரம், திரு.ராமமூர்த்தி அனைவரும் ஒன்று கூடி அருமை சங்கம் அமைக்க கருத்தொருமித்து காரியத்தில் இறங்கத் தொடங்கினர்.ஆதரித்தவர்கள் சிலருண்டு' அவர்களைக் கண்டு அஞ்சி ஓடியவர்கள் பலருண்டு, எனினும் அன்பு சகோதரர் திரு.P.சீனிவாசன் அவர்களின் அயராத உழைப்பாலும் , விடாமுயற்சியாலும் வெற்றி கண்டனர். மேற்கூறியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டமைப்பு ஏற்படுத்தினர் எனினும் அந்தோபரிதாபம் கூட்டமைப்பு என்னும் அங்கத்திற்கேற்ற தலைமை கிடைப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது தயங்கினோர் ஏராளம், நமக்கேன் இந்த வம்பு என்று ஒடி ஒளிந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம், எனினும் பாரதமாதாவின் பண்பான அங்கங்களில் ஒன்றான பைந்தமிழ் நாட்டினிலே புலியை முறத்தால் அடித்துத் துறத்திய மாதர் குலத்திலுதித்த மங்கையாம் திருமதி.பாஸ்கரன் அம்மையார் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று அபயகரம் கொடுத்தார்கள். என்பது அன்றைய சங்க வரலாறு. அன்பிற்கினிய சகோதரிகளே,சங்கம் அமைக்கப்பட்டது, அரசு அங்கீகாரம் பெற்றது. 19.01.1961ம் ஆண்டினிலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில சங்க நிர்வாகிகள் என்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் என்றும் உருவாக்கப்பட்டு மாநாடுகள் நடத்தப்பட்டது. செயற்குழு, மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் நடைபெற்றது. மாநில அளவிலான நிர்வாகிகள் கூடினர். நர்சுகளின் சேவைத் திறன் பற்றி பேசப்பட்டது. மாநில அளவில் நர்சுகள் தங்களது கருத்துக்களைப் பரிமாரிக் கொள்கின்ற நற்பலனைப் பெற்றனர் . செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றி அவ்வப்போது அரசிற்கு அனுப்பப்பட்டது.தமிழ்நாடு அரசு நர்சுகளின் சங்க கோரிக்கைகள் அவ்வப்பொழுது ஓரளவு கவணிக்கப்பட்டு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறிது சிறிதாக நர்சுகளின் துயர் துடைக்கப்பட்டது. எனினும் தமிழ்நாடு அரசு நர்சுகள் என்பவர்கள் ஒரு வழியில் ஓரிடத்தில் சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார்களே தவிர ஏனைய அரசு ஊழியர்களைப் போல் அவர்கள் முழுமையான உரிமை பெற்று தங்களுக்கு முன் நின்று அச்சுறுத்தும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. பதவி உயர்வு என்ற ஒரு தகுதியினை நர்சுகள் பெற்றிருந்தாலும் அது ஒரு கானல் நீராகவே காட்சியளிக்கத் தொடங்கியது. தளிர் நடை போட்டு வந்த நர்சுகள் தளர்ந்த நடைபோட்டு, பின்தவழ்ந்த நடைபோட்டாலும் கூட காலங்கள் பல கடந்து நர்சாகப் பணியேற்று ஆண்டுகள் 26 ஐ எட்டிப் பிடித்தாலும் ஏனோ பதவி உயர்வு என்ற தகுதி மட்டும் கிட்ட நெருங்கவே அஞ்சுகின்றது என்ற அவலநிலை நம்மை ஆட்கொண்டது எனினும் நர்சுகளுக்கே உரிய தனித்தன்மை கொண்ட நாம் இன்னல்கள் பல இருப்பினும் அதனை மின்னலாக மறைத்து விட்டு, இன்முகத்துடன் இனிய உலா வந்து பிணியாளர்களைப் பேணிக் காக்கும் பணியினை பாங்குடன் செய்யத் தவறியதில்லை. இது நாம் வெறும் அலங்காரத்திற்காக கூறிய வார்த்தைகளல்ல. அன்றாட நமது பணி வாழ்க்கையில் கண்கூடாகக் காண்கின்ற கண்ணுக்கினிய காட்சி. அப்படியே ஆண்டுகள் பல கடந்து 26-ம் ஆண்டின் பணிக்கால இறுதியிலேயே பதவி உயர்வென்ற ஒன்று நம்மைப் பதுங்கி எட்டிப் பார்த்தாலும் அந்தோ பரிதாபம் நான் என்னவென்று எடுத்துரைப்பேன்? அன்று நர்சுகளின் தரத்திற்குக் கீழே இருந்த அரசு ஊழியர்களெல்லாம் எட்டாக் கனியாக ஏற்றம்மிகு சம்பள விகிதமெனும் நிலையில் ஊதியக் குழுக்களின் பரிந்துறையில் உயர்ந்து விட்டநேரத்தில் பத்தாண்டு பணி புரியும் நர்சுகளுக்கு ஈடாகவே 26 ஆண்டுகள் கழித்து பதவி உயர் வென்னும் எட்டாப் பழத்தைக் கொட்டாவி விட்டுப் பெற்ற நமது நர்சிங் மேற்பார்வையாளர்கள் ஊதியம் பெறுகின்ற தாழ் நிலையினைப் பெற்றோம் எனினும் என் உத்தம சகோதரிகளே. ஊதியக்குழு பரிந்துரைப்பற்றி உங்களுக்கொன்றும் தெரியாது , ஊதிய விகிதம் பற்றி உங்கள் உள்ளத்தில் ஓர் எண்ணமுமில்லை. ஏனென்றால் வெள்ளை உள்ளம் கொண்ட உங்கள் நினைவெல்லாம் பிணியாளர் என்னும் பிள்ளைகள் கொள்ளை கொண்டு விட்டார்களே ,அவர்களைப் பேணிக்காப்பதில் வெரும்பொழுதைக் கழிக்கப் பழகிவிட்ட உங்களுக்கு ஊதிய விகிதம் பற்றி உணர்வதற்கு நேரமெங்கே? ஏனைய அரசு ஊழியர்கலெல்லாம் விடுமுறை எடுத்தாலும் மிகவும் அத்தியாவசியப் பணியென்று கூறி முக்கியமாக நாட்டிலே கடையெடுப்பு, ஊர்திகள் ஓட்டாமை என்ற நிலை ஏற்பட்டாலும் கூட 4 KM நடந்தே வந்து என்னுடன் பணி செய்து கிடப்பதே என்னும் பாங்கினை கடைபிடிக்கின்றாய்., எனினும் அதே அத்தியாவசியப் பணியிலிருக்கும் நமது மருத்துவர்களுக்கு அண்மை காலமாக அளிக்கப்படுகின்ற சரிகட்டு விடுப்பு, சிறு விடுப்பு , மற்றும் வார விடுப்பு ,பணி விடுப்பு போன்ற விடுப்புகள் அளிக்கப்படும் அதே வேளையில் பெண் பணியாளராகிய நமக்கும் அதே நிலையில் புணிபுரிந்தும் இந்தச் சலுகைகள் மறுக்கப்படுவதை உணர்ந்தாயோ.? ஏன்? பெண்ணாகப் பிறந்து விட்ட பேதைகளே! நாம் என்று எண்ணாத நாட்களிலே நமது துன்பங்கள் , துயரங்கள் துடைக்கப்படவேண்டுமென்று அரசிற்கு நமது சங்கத் தீர்மானங்கள் மூலமாகவும் நிர்வாகிகள் மூலமாகவும் தூதுவிடாத நேரமில்லை........ ம். ...நாம் கண்ட பலன் நீண்ட மெளனம் சங்க நிர்வாகிகளுக்கு அதிகாரிகளின் அச்சுறுத்தல் ஏன் நமக்கு இந்த அவலநிலை சிந்தித்தோம் செயல்பட தொடங்கினோம். ஆண்டுகள் பல கடந்தும் நீண்டு கிடந்த நமது துயரங்களுக்கு வடிகால் அமைக்க விடிவு காலமே இல்லையா என்று எண்ணத் தொடங்கிய பின் தான் - நமது அணுகுமுறைகள் பற்றி ஆராய ஆரம்பித்தோம் விடை கிடைத்தது.நமக்கு விமோசனம் கிடைக்க வழி பிறந்தது .சங்கம் தழைத்தோங்க அங்கத்தினர்கள் முழு ஆதரவை நல்கினர்.மத்திய சங்கம் உயிர் பெற்று விட்டது. உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போமென கிளைச் சங்கங்கள் கிளர்ந்தெழுந்தன.சங்கத்தின் அங்கத்தினர் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது. எங்கும் உத்வேகம் ஏற்பட்டது. சங்க எழுச்சியையும் அங்கத்தினரின் ஆர்வத்தையும் .சங்க நிர்வாகிகளின் அணுகுமுறைகளையும் அறிந்து கொண்டது அரசு. எனினும் நமக்கு விடிவுகாலம் விரைவில் பிறக்குமா? நான்காவது ஊதியக் குழு நம்மை நோக்கி வந்தது. நமது உணவுப்படி என்னும் சலுகையை சரட்டெனப் பரித்து மறுத்தது. தமிழகமெங்கும் உள்ள அனைத்து நர்சுகளையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. சங்க நிர்வாகிகள் பலவழிகளிலும் முயன்றும் பயனளிக்கவில்லை என கண்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் தோன்றி 25 ஆண்டுகளில் செய்யாத ஒரு மாபெரும் புரட்சி செய்ய ஆரம்பித்தோம். ஆம் சீருடையில் தலைநகரில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பிருந்து நமது அவலநிலையை அரசிற்கு வெளிக்காட்டினோம். துன்பத்திலும் ஒரு இன்பம் .உண்ணா நோன்பிருந்த வேலையிலே புரட்சித் தலைவர் .பொன்மனச் செம்மல் அவர்களின் கனவான பார்வை நம்மேல் படும் பாக்கியம் பெற்றோம். நல்ல உள்ளம் கொண்ட அன்றைய நமது சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்கள் நாம் உண்ணா நோன்பிருந்த இடத்திற்கு ஓடோடிவந்து என் அருமை சகோதரிகளே. நீங்கள் அனைவரும் ஏன் உங்களை வருத்திக் கொள்கின்றீர்கள் உங்கள் தேவையை உடனே பூர்த்தி செய்கின்றேன் எனக்கூறி உறுதியளித்தார். மரியாதைக்குரிய சுகாதாரத்துறை செயலர் அவர்களும் நமது சங்க நிர்வாகிகளை அன்புடன் அழைத்து ஆறுதல் சொல்லி நமது குறைகளை கனிவுடன் கவனிப்பதாக வாக்களித்தார். மதிப்பிற்குரிய மருத்துவ கல்வி இயக்குனர் அம்மையார் அவர்களும் நமது நிர்வாகிகளைப் பரிவுடன் அழைத்துப்பேசி நமது கோரிக்கைகள் பற்றி பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்கள். என்ன ஆச்சரியம் சகோதரிகளே, உண்ணா நோன்பிருந்து எண்ணி எட்டு நாட்களில் நமது உணவுப்படி திரும்ப அளிக்கப்படுவதாகவும் , அத்துடன் நமது நீண்ட நாள் கோரிக்கையாகிய சீருடைப் படி உயர்த்தித் தரப்படுவதாகவும், அரசிடமிருந்து நமக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் இனிய செய்தி வந்தது. எப்படி சகோதரிகளே எண்ணிப் பாருங்கள் ஒற்றுமையின் வலிமையை ஒருங்கிணைப்பின் உண்மையை .எனினும் இன்னும் நமது முக்கியமான குறை தீர்ந்தபாடில்லை என்ற காரணத்தால் முச்சந்திக்கு வரவும் முனைந்து விட்டோம். நர்சுகளின் ஊர்வலம் என்றதும் ஊரே திரண்டு விட்டதைப் போன்று சென்னை மாநகரிலே எங்கும் வெண்ணிற ஆடை வேதியர் கூட்டம் கண்டு வியக்கத் தொடங்கினர் மக்கள் செய்தியறிந்த இன்றைய மக்கள்நலவாழ்த்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு.ப.உ.சண்முகம் அவர்களும் அதே மரியாதைக்குரிய சுகாதாரத் துறைச் செயலர் அவர்களும், மதிப்பிற்குரிய மருத்துவ கல்விதுறை இயக்குனர் அவர்களும் நமது நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு மக்கள் திலகமாம், மாதர் குலத்தை காக்க தன்னே சக்கரம் நீட்டி வந்த கார்முகிலாம் தர்மத்தின் காவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தும் பெரும் பாக்கியத்தை அளித்தனர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களையுடைய கோமகன் நாம் அனைவரும் இன்ப அதிர்ச்சி பெறுகின்ற வகையிலே நமது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக் கொண்டதோடு 20 ஆண்டுகள் பணி புரிந்த நர்சுகளுக்கும், நர்சிங் பயிற்சியாளர் நிலை 2 ற்கும் முறையே 1045 ரூ என்றும் 1340 ரூ என்றும் ஊதிய விகிதம் மாற்றியமைக்க உத்தரவிட்டார். எண்ணிப் பார்த்தீர்களா சகோதரிகளே இது ஏன் என்று. ஒற்றுமை , ஒருங்கிணைப்பு , மறந்து விடாதீர்கள் .சங்கம் அமைத்து 25 ஆண்டுகளில் பெற முடியாத சில சலுகைகளை தாய்குலத்தின் தானைத் தலைவர் அவர்களின் பொன்னாட்சி காலத்திலே பெற்றோம் என்றால், இது சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய நர்சுகள் சமுதாயத்தின் பொற்கால மன்றோ . சங்கம் சீராக செயல்படுவது கண்டு சகிக்காத சிலர் நம்மிடையே உண்டு. அவர்கள் சங்க உணர்வை உறுப்பினர்களிடமிருந்து மங்க வைப்பதில் மிகவும் அக்கறை எடுத்து செயல்படுகின்றனர். பயிர் வளர்ந்தால் சில புற்களும் வளர்வது இயற்கைதானே? அவற்றை இனம் கண்டு களை எடுக்க வேண்டியது சங்கக்கடமை என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விட வேண்டாம். நமது உரிமையை கேட்டுப் பெறுகின்ற அதே வேளையில் நமது கடமையிலும் நாம் கண்ணாயிருக்க வேண்டியது தலையாய கடமை என்பதை மனதில் கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் நமது இன்றைய மாண்புமிகு முதல்வர் அவர்களின் கொள்கைக் கேற்ப கண்ணியம்காத்து காலந் தவறாமையைக் கடைபிடித்து கடமை ஆற்றிக் கட்டுப்பாட்டுடன் பொது நல சேவையில் ஈடுபட்டு இன்பம் காண வேண்டுகிறேன். சங்கத்தின் அங்கங்களே,சங்கம் சாதித்தது சிலவுண்டு, சங்கம் சாதிக்க வேண்டியது பலவுண்டு. எனவே குடத்தினுள் விளக்காய் இருந்த நமது சங்கம் குன்றின் மேல் இட்ட விளக்காய் விளங்கும் நிலை மாறாதிருக்க சங்கம் நமக்கு என்ன செய்தது? என்னும் வினாவை விடுத்து சங்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்னும் வினாவிற்கு விடைகாண விரைந்தோடி வாருங்கள். இதுவே நமது சங்கம் வெள்ளி விழா காணும் இப் பொன்னான நன்னாளில் நான் உங்களுக்களிக்கும் நல்வரவு.. வாழ்க நம் ஒற்றுமை , வளர்க நம் சங்கம். , கடமையைச் செய்வோம் உரிமையைப் பெறுவோம். அன்புடன் திருமதி.க.பாப்புராஜன் , முன்னால் மாநில பொதுச் செயலர் TGNA, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் ,இருப்பு மதுரை. ( தொடரும்....) தகவலுக்காக V.மணிமாறன் - சின்னமனூர் GH-தேனி, N.கணேசன் - ஸ்டான்லி - சென்னை-1.