Thursday, 15 September 2016

நதிநீா் இணைப்பை வலியுறுத்தி நடிகா்.திரு.சிவகுமாா் அவா்களின் பத்திாிக்கை பேட்டி....

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!

சென்னை: நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சிவக்குமாரின் கருத்து:
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.
பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா..?

தேதி:16/9/2016