Monday, 7 March 2016

தேசிய நதிநீா் இணைப்பு (National Inter link river service in India) பற்றி என்னுடைய சொந்த கருத்துப்பதிவு:

தேசிய நதிநீா் இணைப்பு
National Inter link river service in India...
                            Created by.
                          Elankovan.K
                         Dt: 02/03/2016
        நமது இந்திய திருநாட்டின் வல்லரசு கனவு நிறைவேறவும், நமது நாட்டின் வளா்ச்சி அசுரவேகத்தில் செல்லவும் தற்போதைய அவசிய மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தேசிய நதிநீா் இணைப்பு.
   
          தேசிய நதிநீா் இணைப்பின்மூலம் நதிநீா் ஆணையம் தேசியமாக்கப்படுவதோடு, நதிநீா் பங்கீடும் நடுநிலையாக்கப்படும்.மேலும் சில மாநிலங்களுக்கிடையிலுள்ள கருத்துவேறுபாடுகளும் மறையும்.

           இதற்கெல்லாம் முத்தாய்பாக, அனைத்து மாநில நதிகளையும் ஒன்றினைக்கும்பட்சத்தில், சில மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம், பல மாநிலங்களில் தண்ணீா் பஞ்சம் நீங்குவதோடு மட்டுமின்றி,இதன்மூலம்அனைத்து மாநில நதிகளிலும் நீா்வரத்து நிரந்தரமாகும்போது, அங்கு விவசாயம் மூன்று போகம் விளைவிக்கமுடியும்.இதனால் நம் இந்திய திருநாடு தானிய மற்றும் உணவு தேவைகளில் தன்னிறைவு அடைவதோடு,ஏற்றமதியும் செய்து நாம் வல்லரசாகும் கனவை நனவாக்கும் காலம் விரைவில் எட்டக்கூடும்.

         பொதுவான கருத்து என்னவெனில், ஒரு நாடு வல்லரசாக வேண்டுமானால், அந்நாட்டில் விவசாயம், கல்வி,பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் பல சிறந்து விளங்கினால் மட்டுமே வல்லரசு அந்தஸ்தை விரைவில் எட்ட முடியும்.

        மேலும் இதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும், தனிமனித பொருளாதாரம் சீரடையும்,விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்கலாம், இயற்கை வளங்கள் கூடும், அதிக மழைபெறும் வாய்ப்பு அதிகாிக்கும்.

        நமது நாட்டில் ஒருசில மாநிலம் குறிப்பாக தமிழக மக்கள் விவசாயத்தை வெறுக்கும் தொழிலாக நினைக்க  காரணம், நீாில்லாததும், வானம்பாா்த்து பயிாிடுவதும்,குறிப்பிட்ட நேரத்தில் பருவ மழை பொய்த்துவிடுவதும், விவசாயத்திற்க்கு செய்யும் செலவு அதிகமாகவும் வரவு குறைவாக இருப்பதுமே காரணம். இதனாலயே நம்மில் பல இளைஞா்கள் விவசாய குடும்பத்தில்  பிறந்தாலும் விவசாயத்தை விட்டு,கல்வி கற்று வேலை செய்யவே விரும்புகின்றனா்.

         நமது அண்டை நாடான சீனா, தேசிய நதிகளை ஏற்கனவே இணைத்ததாலோ என்னவோ! அந்நாட்டின் பொருளாதாரம்  தன்னிறைவு அடைந்து வல்லரசானதோடு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் பொருளாதார உதவிகள் செய்கிறேன் என்ற போா்வையில், அந்நாட்டின் இறையாண்மைகளில் தலையிட்டு, தற்போது ஆசியா கண்ட நாடுகளுக்கெல்லாம் தலைவனாகவும், பஞ்சாயத்துகாரனாகவும், உலக நாட்டாமையான அமொிக்க நாட்டுக்கே எாிச்சலூட்டும் நாடாகவும் வளா்ந்துள்ளது. சில சமயங்களில் நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிலும்,இறையாண்மையிலும் தலையிட்டு, சில சிறு நாடுகளை ஒன்றிணைத்து, நமக்கு எதிராக செயல்பட தூண்டும் ஒவ்வாத செயலையும் செய்து கொண்டிருக்கிறது. இவையனைத்தும் அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சியே காரணம். இந்த  பொருளாதார வளா்ச்சி நதிநீாின்  இணைப்பே காரணம்.

         நமது நாட்டில் ஏற்கனவே ஆண்ட அரசும், தற்போது ஆளும் அரசும் இந்த நதிநீா் இணைப்பை செயல்படுத்த ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகின்றனா் என புாியவில்லை. இதை செயல்படுத்த ஏற்படும் செலவை நினைத்தா? அல்லது அதனால் ஏற்படும் மாநில பிரச்சனைகளா? இதற்கான இடங்கள் கையகப்படுத்தும் பிரச்னையா? தொியவில்லை.

            எதுவாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் மட்டும் இதை செயல்படுத்த நினைத்துவிட்டால்,இன்னும் பத்து ஆண்டுகளில் தேசிய நதிநீா் இணைப்பு என்ற என் போன்றோாின் கனவு நனவாகும். அதுமட்டுமில்லாமல், பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் நமது நாடு வல்லரசு அந்தஸ்தையும் தாண்டிச் செல்லும். காரணம், நமது பரந்து விாிந்த நிலப்பரப்பு, மக்கள்தொகை, மற்றும் இளைஞா்களின் எழுச்சியும் தான்.

           நதிநீா் இணைப்புக்கு மாநிலங்களுக்கிடையில் இடம் கையகப்படுத்தும் செயல்பாடுதான் சிக்கல் என்றால், அதற்கான எளிய வழி, என்னவென்றால் எமது மாவட்டத்தில் பிறந்த மாமேதை, முன்னாள் ஜனாதிபதி, டாக்டா் A.P.J.அப்துல்கலாம்  அவா்கள் கடந்த கால அரசுக்கு பாிந்துரை செய்த  சாலையோர நீா் ஆதார இணைப்பு என்ற திட்டத்தை அரசு ஆலோசனைக்கு எடுத்து அது சிறந்தது என்றால் அதை உடனே செயல்படுத்தலாம்.

          அதாவது அவரது திட்டப்படி, காஷ்மீா் முதல் கன்னியாகுமாி வரை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளதல்லவா? அதன் இருபுறங்களிலும் 20 முதல் 50 அடி தூரம் வரை மட்டுமுள்ள இடங்களை கையகப்படுத்தி மேலும் ஆழப்படுத்தி நதிநீா் இணைப்புக்கு ஏதுவாக செய்யலாம்.இதனால் மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சனைகள் எழாது.

          நமது நாட்டு இளைஞா்கள் குறிப்பாக நதிநீா் இணைப்பின் அவசியம் வேண்டி நமது பிரதமருக்கு அடிக்கடியும் மொத்தமாகவும் e-mail அனுப்பலாம். நானும் என்னுடைய பங்கிற்க்கு நான்கைந்து முறை e-mail அனுப்பியுள்ளேன். அல்லது இதற்கான இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அரசிற்க்கு இதை தொிவிக்கலாம். நன்றி.
            
               ஜெய்ஹிந்த்....
             By.Elankovan.K